சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பொது நிதியை வேறு பயன்பாட்டுக்கு பரிமாற்றம் செய்ததைக் கண்டித்து, ஒன்றியத் தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவராக காயத்ரி இளங்கோவன் (திமுக) பதவி வகித்து வருகிறார். இந்த ஒன்றியத்தில் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பொது நிதி இருப்பு இருந்த நிலையில், ஒன்றியக்குழுவின் அனுமதி இல்லாமல், அதிகாரிகள் வேறு பயன்பாட்டுக்கு நிதியை பரிமாற்றம் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றியக்குழுவில் ஏற்கெனவே கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள குளம், குட்டைகளை பராமரிக்க ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியும், ஒன்றியக்குழுவின் ஒப்புதல் இல்லாமல் ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னிமலை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன் தினம் இரவு, ஒன்றியத் தலைவர் காயத்ரி இளங்கோவன் தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சென்னிமலை ஒன்றிய பொது நிதியில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.36 லட்சம் மீண்டும், ஒன்றிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத் தலைவர் காயத்ரி இளங்கோவன் (திமுக) தலைமையில், கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் நேற்று முன் தினம் இரவு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago