அரசு கல்லூரிக் கட்டணம் வசூல் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கை ஏற்று அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தையே வசூலிக்கக் கோரி, கடந்த 50 நாட்களுக்காக, இரவு, பகல் பாராமல் மாணவர்கள், அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க முடியாமல், பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக, கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர், உணவு என அனைத்து அடிப்படை வசதிகளையும் தடை செய்துள்ளது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக் கிறது. கடந்த 2013-ம் ஆண்டு முதல்,ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தமிழக உயர் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அரசால் நிர்வகிக்கப்படும் இந்தக் கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை விட, 30 மடங்கு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே, இக்கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர்.
எனவே, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப் பட்டுள்ள கட்டணத்தின் தொகையே, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் நிர்ண யிக்க வேண்டும்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவ,மாணவிகளில் பெரும்பாலோர் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதை புரிந்து கொண்டு, இவ்விவகாரத்தில் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாணவர்களையும், பெற்றோரையும் அரசியல் கட்சிகளையும் திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago