கரோனா பாதுகாப்பு நடைமுறைகளுடன் சென்னிமலை முருகன் கோயிலில் இன்று தைப்பூசத் தேரோட்டம்

By செய்திப்பிரிவு

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் இன்று நடக்கிறது.

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கைலாசநாதர் கோயிலில், வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நேற்று இரவு நடந்தது.

இன்று (28-ம் தேதி) 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தைப்பூசத் தேரோட்டம் நடக்கிறது. நாளை திருத்தேர் திருவீதி உலா நிறைவடைந்து நிலை சேர்கிறது. சனிக்கிழமையன்று பரிவேட்டை நிகழ்வும், பிப்ரவரி 1-ம் தேதி இரவு 7 மணிக்கு மகாதரிசனம் நடக்கிறது. 2- ம்தேதி மஞ்சள் நீராட்டுடன் தைப்பூசத் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

முகக்கவசம் கட்டாயம்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி, முக கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு, தேர் வடம் பிடிக்க அனுமதியில்லை.10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் தேங்காய், பழம், பூ, மாலை மற்றும் அபிஷேகப் பொருட்கள் கொண்டு வர அனுமதியில்லை. பக்தர்கள் தங்களது குழுவின் சார்பாக 10 காவடிகள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும். இன்றும், நாளையும் தனியார் வாகனங்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்