நெல்லை கூலக்கடை பஜாரில் சுகாதார சீர்கேடு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி டவுன் கூலக்கடை பஜார் பகுதி சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகிறது. அங்குள்ள நெல்லை கால்வாய் கரை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது.

திருநெல்வேலி மாநகரில் பாரம்பரியமிக்க தெருக்கள், இடங்கள் அதிகமுள்ளன. அந்த வகையில் பொற்கொல்லர்கள் நகை தொழில் செய்துவரும் கூலக்கடை பஜாருக்கும் சிறந்த பாரம்பரியம் இருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொற்கொல்லர்கள் இங்குள்ள கடைகளில் நகை தொழில் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் எப்போதும் வாகன போக்குவரத்தும், ஆட்கள் நடமாட்டமுமாக பரபரப்புடன் இந்த பகுதி காணப்படும். லட்சக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் இங்கு நிலவும் சுகாதார சீர்கேடு திருநெல்வேலியின் பெருமைக்கே களங்கமாக மாறியிருக்கிறது.

இந்த பஜாரையொட்டி நெல்லை கால்வாய் செல்கிறது. அந்த கால் வாயின் கரைகள் குப்பைகளும், கழிவுகளும் கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளதுடன், திறந்த வெளி கழிப்பிடமாகவும் மாறியிருக்கிறது. அங்குள்ள திருநெல்வேலி மாநகராட்சி கட்டண கழிப்பிடத்திலிருந்து கழிவுகள் அனைத்தும் நெல்லை கால்வாயில் திறந்துவிடப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள பாலம் உடைந்திருந்தது. அதை சீரமைக்க வேண்டும் என்றும், சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என்றும் திருநெல்வேலி நகர பொற்கொல்லர்கள் சங்கத்தினர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி பாலம் சீரமைக்கப்பட்டது. ஆனால் குப்பைகள் கொட்டு வதையும், திறந்தவெளி கழிப்பிடமாக்கப்படுவதையும் மாநகராட்சியால் தடுக்க முடிய வில்லை. அவ்வப்போது துப்புரவு பணியாளர்கள் அங்குள்ள குப்பைகளை அள்ளி எடுத்துச் செல்வது மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் பணிபுரியும் இந்த இடத்தில் கழிப்பிட வசதி போதுமானதாக இல்லை என்பதால் தான் இந்நிலை என்று, அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பொற்கொல்லர் சங்கத்தைச் சேர்ந்த பி. சிவக்குமார் கூறும்போது, “மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் ஒருமுறைக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பலரும் அங்கு செல்வதை தவிர்த்து, திறந்தவெளியை பயன்படுத்துகிறார்கள். எனவே, இலவச கழிப்பிடத்தை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரும் கழிப்பிடத்தை அமைத்தால், அதை பராமரிக்க சங்கத்தினர் தயாராக உள்ளனர். குப்பைகளை கொட்டுவதை தடுக்க வும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்