சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டார். அமமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திருநெல்வேலியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவைச் சேர்ந்த மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா என்பவர் பெயரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், “அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வருக, வாழ்க, வெல்க” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், அதில் ஜெயலலிதா, சசிகலா படங்களுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படங்களும் இடம்பெற்றிருந்தன.
கட்சியில் இருந்து நீக்கம்
இந்த சுவரொட்டி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சுப்பிரமணிய ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.அதில், “ அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், அதிமுக கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago