கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் குடியரசு தின விழா நேற்றுகோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கோவை வ.உ.சி மைதானத்தில், நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தேசியக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து மாநகர மோட்டார் வாகனப் பிரிவு ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் நடந்த காவல் துறை, தீயணைப்புத் துறை,ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். பின்னர், 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 124 காவலர்களுக்கு பதக்கங்களையும், கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், சுகாதாரத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 96 பேருக்கு சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர்ராமதுரை முருகன், மாநகர காவல்ஆணையர் சுமித்சரண், கோவை சரக டிஐஜி நரேந்திரன்நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து, கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்கள் 10 பேருக்கும், 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 10 பேருக்கும் நற்சான்றிதழ்களை ஆணையர் வழங்கினார். இதில் துணை ஆணையர் மதுராந்தகி, ஸ்மார்ட் சிட்டி முதன்மை செயல் அலுவலர் ராஜ்குமார், மாநகராட்சி உதவி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தேசியக்கொடியை ஏற்றி காவல்துறை யினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.55 போலீஸாருக்கு முதல்வர்பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக பணிபுரிந்த 177 அரசு அலுவலர்கள், பணியாளர்கள், 98 போலீஸார், 11 தீயணைப்புமீட்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 286 பேருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
பல்வேறு துறைகளின் சார்பில், 222 பயனாளிகளுக்கு ரூ. 6.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல், வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற விழாவில், மாநகராட்சிஆணையர் க.சிவக்குமார் தேசியக்கொடி ஏற்றினார். திருப்பூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார், நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி, தேசியக்கொடி ஏற்றினார். நீலகிரி
உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியேற்றி காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட காவல் துறைகண்காணிப்பாளர் வி.சசிமோகன் உடனிருந்தார். தொடர்ந்து பல்வேறு துறைகள் மூலம் 40 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே28 லட்சத்து 49 ஆயிரத்து 780 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார். மாவட்டவருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, விழா நடைபெற்றமைதானத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
கல்வி நிறுவனங்கள்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பெ.காளிராஜ், தேசியக் கொடி ஏற்றினார். பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பதிவாளர் (பொ) க.முருகன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் என்.குமார் தேசியக் கொடி ஏற்றினார். கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் (பொ) சுமதி, தேசியக்கொடி ஏற்றினார். தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் த.வீரமணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
புலியகுளம் அந்தோணியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில், தலைமை ஆசிரியை அமலோற்பவமேரி தேசியக்கொடி ஏற்றினார். தேசிய மாணவர் படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸாண்டர் தலைமையில், அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், கூடுதல் ஆணையர் மதியழகன் தேசியக் கொடி ஏற்றினார். இத்துறை அலுவலர்களின் குடியிருப்பில் நடைபெற்ற விழாவில், மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலக ஆணையர் ஜெய்வதன் இங்லே தேசியக்கொடி ஏற்றினார். கோவை ஐஎன்எஸ் அக்ரானி வளாகத்தில் கமாண்டிங் அலுவலர், போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago