தளவானூர் தடுப்பணை சுவர் சேதமடைந்த விவகாரம் வெள்ளை அறிக்கை வெளியிட சிபிஐ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தளவானூர் தடுப்பணை சுவர் சேதமடைந்தது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூ னிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே தளவானூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.35 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை கடந்த3 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை தடுப்பணையின் ஒருபுற தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. அங்கிருந்த 3 மதகுகளில் ஒரு மதகு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. சேதமடைந்த தடுப்பு சுவர் கட்ட ரூ. 7 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஏவி சரவணன் கூறியது:

சேதமடைந்த தடுப்பு சுவரை கட்ட தற்போது ரூ. 7 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யவேண்டிய அவசியம் என்ன? பணிகளை கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த அரசு, ஒப்பந்ததாரர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து தடுப்பணைகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தடுப்பணை தரமற்ற முறையில் கட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடனடியாக தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தரமான முறையில் கட்டுமான பணிகளை செய்ய வேண்டும். தரமற்ற முறையில் தடுப்பணை கட்டி முறைகேடு செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்