திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாவையொட்டி, திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் சு.சிவராசு, தேசியக் கொடியை ஏற்றிவைத்து, வண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர், திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், காவல் துறையினருக்கு பதக்கங்கள், சிறப்பாக பணியாற்றிய அரசின் பல்வேறு துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள், கரோனா பரவல் தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், சித்த மருத்துவத் துறையினர், வருவாய், ஊரக வளர்ச்சி உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் என மொத்தம் 534 பேருக்கு ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், திருச்சி சரக டிஐஜி இசட்.ஆனிவிஜயா, மாநகர காவல் துணை ஆணையர்கள் ஏ.பவன்குமார், ஆர்.வேதரத்தினம், மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் (பொறுப்பு) த.செந்தில் குமார், மாவட்ட வருவாய் அலு வலர் த.பழனிகுமார், சார் ஆட்சி யர்கள் ஜோதிசர்மா (முசிறி), நிஷாந்த்கிருஷ்ணா (ரங்கம்), ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ச.ஜெயப்பிரித்தா, சாந்தி கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் க.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, காந்தி மார்க்கெட் எதிரே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

குடியரசு நாளையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 10 பேரின் வீடுகளுக்குச் சென்று பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றிவைத்தார்.

தொடர்ந்து, 25 ஆண்டுகள் பணியாற்றிய 18 பேருக்கு தலா ரூ.2,000 மற்றும் சான்றிதழ், கரோனா பரவல் தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள் 38 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆணையர் வழங்கினார். நகரப் பொறியாளர் எஸ்.அமுதவல்லி, நகர் நல அலுவலர் எம்.யாழினி, செயற்பொறியாளர்கள் ஜி.குமரேசன், பி.சிவபாதம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பெரம்பலூரில்...

பெரம்பலூரில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர் ப.வெங்கடபிரியா தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். பின்னர், கரோனா வைரஸ் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 74 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், 23 காவலர்களுக்கு தமிழக முதல்வரின் பதக்கங்களை வழங்கினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், சார் ஆட்சியர் ஜே.இ.பத்மஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கே.லோகேஸ்வரி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ந.சக்திவேல், முதன்மைக் கல்வி அலுவலர் க.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி நிஷாபார்த்திபன் தேசியக்கொடி ஏற்றினார். ஏடிஎஸ்பிக்கள் கார்த்திகேயன், நீதிராஜ், டிஎஸ்பி சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சுபாதேவி தேசியக்கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். நீதிபதிகள் கருணாநிதி, கிரி, வினோதா, ஷகிலா, தனசேகரன், அசோக்பிரசாத், கருப்பையா மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

அரியலூரில்...

அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர் த.ரத்னா தேசியக் கொடியை ஏற்றிவைத்து, சமாதானப் புறாவை பறக்கவிட்டார். தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மேலும், மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.னிவாசன் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த 28 காவல்துறையினருக்கு முதல்வர் பதக்கங்களையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 319 அலுவலர்களுக்கு விருது, பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.

பின்னர், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த ஆட்சியர், மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி அ.முத்துகுமாரசாமி வீட்டுக்குச் சென்று, அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

தொடர்ந்து, அரியலூர் கோதண்டராமசாமி கோயிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.னிவாசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் ஜோதி, பூங்கோதை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டையில்...

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தேசியக் கொடியேற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், காவல் துறையைச் சேர்ந்த 63 பேருக்கு தமிழக முதல்வரின் பதக்கங்களையும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 162 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். மைதானத்தில் ஆனந்தராஜ் என்பவர் வடிவமைத்திருந்த ராணுவ தளவாட மாதிரிகளையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

கரூரில்...

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் சு.மலர்விழி தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

ஆட்சியருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் ஆகியோர் தேசியக்கொடி நிறத்திலான மூவர்ண பலூன்கள், சமாதானப் புறாக்களை பறக்கவிட்டனர்.

காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 39 காவலர்களுக்கு முதல்வரின் பதக்கங்கள், கரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய மருத்துவர்கள், காவல் துறை அலுவலர்கள், வருவாய்த் துறை, வளர்ச்சித் துறை அலுவலர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 44 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

மேலும், 109 பயனாளிகளுக்கு ரூ.1,38,32,530 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கரூர் நகராட்சி ஆணையாளர் சுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அருள், கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், குளித்தலை சார் ஆட்சியர் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மான், ஆதிதிராவிடர் நல அலுவலர் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஹஸ்ரத்பேகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், தாந்தோணிமலை ஊரணி காளியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஆட்சியர் பங்கேற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்