நூல் விலை உயர்வைக் கண்டித்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் ஒரு வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் விசைத்தறி தொழில் அடியோடு முடங்கிப் போனது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது விசைத்தறி உற்பத்தியை தொடங்கிய நிலையில் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மீண்டும் விசைத்தறி தொழில் முடங்கும் அபாயத்தில் உள்ளது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி விசைத்தறி உற்பத்தியாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததால் இன்று (27-ம் தேதி) முதல் வரும் 2-ம் தேதி வரை ஒரு வாரம் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன், திருமுருகன் சிறு விசைத்தறி கூலித் தொழிலாளர் சங்கம், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் ஆகியவை அறிவித்துள்ளன.
பிப்ரவரி மாதம் நூல் விலை மேலும் உயர்ந்தால் நூல் கொள்முதல் செய்வதை நிறுத்துவது, நூல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தம் செய்வது என்றும் முடிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago