நெல்லை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் சீரானது குடியரசு தினவிழாவில் ஆணையர் தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகராட்சியில் தற்போது குடிநீர் விநியோகம் சீராக உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியதாவது:

கரோனா வைரஸ் தாக்கத்தின்போது அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றியதன் காரணமாக, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. ஆனால், தற்போது மாநகராட்சியில் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ராமையன்பட்டி குப்பை சேகரிப்பு மைய வளாகத்தில், கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இயற்கை காடுகளை உருவாக்கும் நோக்கில் “சத்யசாய் சேவா” அமைப்புடன் இணைந்து 10 ஆயிரம் பல்வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, தற்போது நல்ல நிலையில் வளர்ந்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையால், தாமிரபரணியில் பெருவெள்ளம் ஏற்பட்டதில் மாநகராட்சிக்கு சொந்தமான 48 நீர் உறிஞ்சும் கிணறுகள் அனைத்தும் நீரில் மூழ்கி, மின்மோட்டார் மற்றும் குழாய்கள் அனைத்தும் பலத்த சேதம் அடைந்தது. இந்தச்சூழலில், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டாலும், லாரிகள் மூலமாக குடியிருப்புதாரர்களுக்கு தாமதமின்றி குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஒருசில வார்டுகளில் தவிர்க்க முடியாத பணி நடைபெறுவதைத்தவிர, தற்போது மாநகரில் குடிநீர் விநியோகப் பணி சீராக உள்ளது. விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தின்கீழ், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விபத்து உள்ளிட்ட அகால மரணம், விபத்தில் நிரந்தர ஊனம் ஆகியவற்றால் பாதிப்படைந்த ஏழைக் குடும்பங்களைக் கண்டறியும் களப்பணியில் இதுவரை 34,488 நபர்களை அடையாளம் காணும் பணி முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 88 பேருக்கு நற்சான்றிதழ்களை அவர் வழங்கினார். செயற்பொறியாளர்கள் எல்.கே.பாஸ்கர், என்.எஸ்.நாராயணன், மாநகர் நல அலுவலர் சரோஜா, உதவி ஆணையாளர்கள் ஐயப்பன், சொர்ணலதா, வெங்கட்ராமன், பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்