திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் வே. விஷ்ணு தேசியக் கொடியேற்றினார். விழாவில் 16 பேருக்கு ரூ.94.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேசியக் கொடியேற்றினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து காவல்துறையில் 109 பேர், தீயணைப்புத்துறையில் 136 பேர், மாவட்ட நிர்வாக அளவிலான அலுவலர்கள் 8 பேர், வருவாய்த்துறையில் 70 பேர், , 108 ஆம்புலன்ஸ் சர்வீஸில் 4 பேர், சிலம்பக் கலைஞர்கள் 19, பேர், தமிழ்நாடு சுகாதார திட்டத்தில் 2 பேர் உட்பட மொத்தம் 399 பேருக்கு ஆட்சியர் பாராட்டுச் சான்று மற்றும் பதக்கங்களை வழங்கினார். அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 16 பேருக்கு ரூ.94.46 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டன. 18 சிலம்பக் கலைஞர்கள் பங்கேற்ற சிலம்பாட்டம் நடைபெற்றது.
விழாவில் மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர், துணை ஆணையர் சரவணன், சார் ஆட்சியர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதீக் தயாள், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
கரோனா கட்டுப்பாடு காரணமாக விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. மைதானத்தில் பார்வையாளர் மாடங்களில் குறைந்த அளவுக்கே பொதுமக்கள் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago