செல்போன் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாற்றுத் திறனாளிகள் 49 பேருக்கு ஸ்மார்ட் செல்போன்கள் நேற்று வழங்கப்பட்டன.
பார்வையற்ற மாற்றுத்திறனாளி களுக்கு தமிழக அரசு சார்பில், ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு செல்போன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 3 மாவட்டங்களையும் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஸ்மார்ட் செல்போன் கேட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், குறைந்த அளவி லான செல்போன்கள் வந்ததால் விண்ணப்பித்த அனைவருக்கும் செல்போன்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, விண்ணப்பித்த அனைவருக்கும் ஸ்மார்ட் செல்போன்கள் வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மனு அளித்தனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் 105 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் செல்போன் பெற தகுதிபெற்றனர். இவர்களுக்கு, ஜனவரி 25-ம் தேதி முதல்கட்டமாக 105 பேருக்கும் செல்போன் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் செல்போன்களை பெற நேற்று முன்தினம் வந்தனர். நீண்ட நேரம் காத்திருத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன்கள் வழங்கப்படவில்லை.
குறைந்த அளவிலான செல்போன்கள் வந்ததாக கூறி 13 பேருக்கு மட்டும் நேற்று முன்தினம் செல்போன் வழங்கப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற மாற்றத்திறனாளிகள் வேலூர் அண்ணாசாலையில் நேற்று முன்தினம் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தெற்கு காவல் துறையினர் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் மாற்றுத்திறனாளிகள் நேற்று முன்தினம் இரவு வரை போராட்டத்தை தொடர்ந் தனர்.
இந்நிலையில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 49 பேருக்கு தலா ஒரு ஸ்மார்ட் செல்போன் நேற்று வழங்கப்பட்டது. வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் 49 மாற்றுத் திறனாளிகளுக்கும் ஸ்மார்ட் போன்களை வழங்கினார். 1 செல்போன் விலை ரூ.12 ஆயிரம் ஆகும்.
விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் செல்போன் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி யில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago