பெருந்துறை சிப்காட்டிற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி, ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் வி.எம்.கந்தசாமி, கே.பரமசிவம், பி.சிவக்குமார், ஜி.பழனிசாமி, வி.டி.ஜெகதீஸ்வரன் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெருந்துறை வட்டாட்சியர் ஜி.முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தொடர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சிப்காட் தொழில்வளர்ச்சி மையம் அமைப்பதற்காக, கடந்த 1991-ம் ஆண்டு பெருந்துறை மற்றும் ஈங்கூர் கிராமத்தில் 2700 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான இழப்பீட்டுத் தொகையாக, ஈங்கூர் கிராமத்தில் ஏக்கருக்கு காட்டுப் பூமிக்கு ரூ.60 ஆயிரமும், தோட்டப் பூமிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், பெருந்துறை கிராமத்தில் ஏக்கருக்கு காட்டுப் பூமிக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், தோட்டத்திற்கு ரூ.2 லட்சமும் அரசால் வழங்கப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் 100 குடும்பத்தினருக்கு பாத்தியப்பட்ட 200 ஏக்கர் நிலத்திற்கு, ஏக்கருக்கு ரூ.60 ஆயிரத்திற்கும் குறைவான தொகையே வழங்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டது. தங்களுக்கு நியாயமான இழப்பீடு கோரி விவசாயிகள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
இதில், நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு மற்றும் வட்டி, 30 சதவீத கருணைத்தொகை வழங்க வேண்டுமென ஈரோடு மாவட்ட கூடுதல் நீதிமன்றம் கடந்த 2006-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிப்காட் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிமன்றத் தீர்ப்பின் படி இழப்பீட்டுத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். இழப்பீடு தொகை தொடர்பாக வழக்கு தொடர்ந்த மற்றும் அறியாமை காரணமாக வழக்கு தொடராமல் உள்ள விவசாயிகள் என நிலம் கொடுத்த அனைத்து விவசாயிகளுக்கும் நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, சிப்காட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago