ஈரோடு பேருந்து நிலையம் ரூ.29.50 கோடியில் புனரமைக்கும் பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29.50 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தை நவீன முறையில் புனரமைக்கும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தில் நடந்த பூமி பூஜை விழாவில், பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தில் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிதாக 65 பேருந்துகள் அடித்தளத்தில் நிறுத்துவதற்கும், மேலே வணிக வளாகம் கட்டுவதற்கும் திட்டமிடப்படுள்ளது. மேலும், மினி பேருந்துகள் மேட்டூர் சாலை வழியாக வெளியே செல்வதற்கும், பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் நடைபாதை மற்றும் பயணிகளுக்கான அரங்கங்கள் ரூ.29.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளன. போக்கு வரத்து பாதிப்பில்லாத வகையில் இந்த பணிகள் நடைபெறும்.

ஈரோடு காலிங்கராயன் விடுதி முதல் திண்டல் வரை மேம்பாலத்தை நீட்டிப்பு செய்ய மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு நகரில் மின் பழுதுகளைத் தவிர்க்கும் வகையில், ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதைவடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனைக்கல்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள புறநகர் பேருந்து நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர, அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது, என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்