டிராக்டர்களில் பேரணி சென்று போராட்டம் நடத்தினால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தென்காசியில் இன்று (26-ம் தேதி) இருசக்கர வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இலத்தூர் விலக்கில் இருந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் வரை பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்டவற்றை பேரணிக்கு பயன்படுத்தினால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று தென்காசி மாவட்ட எஸ்பி சுகுணாசிங் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் சிலகுறிப்பிட்ட அரசியல் கட்சியினர்விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர், மாட்டுவண்டி போன்ற வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்ததிட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
போராட்டங்களில் அனுமதியின்றி டிராக்டர்களை பயன்படுத்தினால் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்” என்றார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் அனுமதியின்றி விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக 144 குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது கரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.இந்நிலையில் அதிகளவு மக்கள் கூடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், போராட்டங் களில் அனுமதியின்றி பயன்படுத்தும் டிராக்டர் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago