வேலூர் அடுத்த புரத்தில் சக்தி கணபதி கோயில் குடமுழுக்கு விழா சக்தி அம்மா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
வேலூர் அடுத்த புரம் பொற்கோயில் வளாகத்தில் ரூ.13 கோடி மதிப்பில் சக்தி கணபதி கோயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 40 அடி நீளமும், 25 அடி அகலமும், 40 அடி உயரமும் கொண்ட இந்த கோயில் முழுக்க முழுக்க 700 டன் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோயில் மூலவராக 1,700 கிலோ எடையுள்ள வெள்ளியால் ஆன கணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 15-ம் தேதியில் இருந்து நேற்று காலை வரை ஒரு லட்சத்து 8 ஆயிரம் நவதானிய லட்டுகளை கொண்டு சித்தர்கள் விநாயகருக்காக பூஜை செய்து தமிழ் மந்திரங்கள் மூலம் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வேத மந்திரங்கள் முறைப்படி யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9 மணி முதல் 10.20 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
யாக சாலையில் இருந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு எடுத்துவரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தின் மீது சக்தி அம்மா ஊற்றி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, வெள்ளியால் ஆன சக்தி கணபதிக்கு புனித நீரை சக்தி அம்மா ஊற்றி பூஜை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலை துறை இணை அமைச்சர் வி.கே.சிங், தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம். ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மகாதேவமலை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், வாலாஜா தன்வந்திரி பீடம் தன்வந்திரி சுவாமிகள், எம்எல்ஏக்கள் நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்) உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago