வேளாண் திருத்த சட்டங்களுக்கு தமிழக விவசாயிகள் ஆதரவு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தகவல்

By செய்திப்பிரிவு

வேளாண் திருத்த சட்டங்களுக்கு தமிழக விவசாயிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர், என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசினார்.

நாமக்கல்லில் பாஜக அணி, பிரிவு நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர் என். பி. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நகரத் தலைவர் கே.பி.சரவணன் வரவேற்றார். கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலின் முருகக் கடவுளை அவமதித்தார். ஆனால், திருத்தணியில் நடந்த கூட்டத்தில் அவர் தன் கையில் வேல் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது கடவுள் அவருக்கு கொடுத்த தண்டனை. இந்து கடவுள், இந்து மக்களுக்கு நான் தான் பாதுகாவலர் என ஸ்டாலின் நாடகமாடுகிறார்.

வெற்றிவேல் யாத்திரை நடத்தியதன் பலனாகவும், நமது கோரிக்கையை ஏற்றும் தமிழக அரசு தைப்பூசத்திற்கு பொதுவிடுமுறை அளித்துள்ளது.

முதல் முறை வாக்காளர்கள் பாஜகவுக்கு வருகின்றனர். நம் தலைவர்கள் எடுத்த நடவடிக்கையால் கரோனா கட்டுப்படுத்தப் பட்டது. கரோனா காலத்தில் தமிழகத்தில் 1 கோடி பேருக்கு ஜன்தன் வங்கிக் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.500 வழங்கப்பட்டது. தமிழகத்தில் 65 லட்சம் பேருக்கு இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் திருத்த சட்டங்களுக்கு தமிழக விவசாயிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர், என்றார்.

தொடர்ந்து பாஜக தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 80 சதவீதம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். பிப்ரவரி மாதம் கட்சியின் பல்வேறு அணிகளின் மாநாடு நடத்தவும், மார்ச் மாதம் மாநில மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தான் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது தெரியவரும். வேல்யாத்திரை உள்ளிட்டவை மூலம் பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்