ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 8111 பேர் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் கீழ் 37 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. நோயாளிகளிடம் இருந்து அவசர அழைப்பு பெறப்பட்ட 8 முதல் 14 நிமிடங்களில், நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களுக்கு சேவையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தை மேலும் குறைக்க மற்றும் அவசர காலத்தில் விரைவில் சேவை தரவேண்டும் என்பதற்காக தற்போது, ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் கருவி பெருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அழைப்பவரின் இடத்தினை துல்லியமாக தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து ஆம்புலன்ஸ்களுக்கும் செல்போன் வழங்கப்படட்டுள்ளது.
மேலும், அதிக அழைப்பு வரக்கூடிய பகுதிகள் கண்டறியப் பட்டு அங்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கெட்டிசெவியூர், கூடக்கரை, குருவரெட்டியூர் ஆகிய இடங்களில் மலைவாழ் மக்களின் நலனுக்காக 5 வாகனங்கள் 24 மணி நேரமும் இயங்கும் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் 39 ஆயிரத்து 818 நபர்கள், 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதிலும் குறிப்பாக 7727 கருவுற்ற தாய்மார்கள் மற்றும் 7196 பேர் சாலை விபத்திற்காக உபயோகித்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டு 40 குழந்தைகள் வாகனத்திலேயே பிறந்துள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கையில் 8111 பேர் பயனடைந்துள்ளனர்.
பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்ஸ் ஈரோடு, கோபி மருத்துவமனையில் இன்குபேட்டர் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகளுடன் நிறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago