மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த எப்.கீழையூரில் பொது மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எப்.கீழையூரில் தாழ்த்தப்பட்ட 70 குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக காவிரி குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதி மக்கள் நேற்று காலிக் குடங்களுடன் மணப்பாறை- கோவில்பட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து ஊராட்சி மன்றத் தலைவர் அழகர் மற்றும் காவல் துறையினர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை லாரி மூலம் காவிரி குடிநீர் விநியோகிப்பதாகவும் கூறினர். இதையடுத்து, மக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து எப்.கீழையூர் மக்கள் கூறும்போது, “காவிரிக் குடிநீரைத் தவிர்த்து வேறு எந்த நீராதாரமும் எங்கள் குடியிருப்புப் பகுதிக்குக் கிடையாது. இந்தநிலையில், கடந்த 3 மாதங்களாக காவிரி குடிநீர் முறையாக வரவில்லை. இதுகுறித்து பல முறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, சாலை மறியலில் ஈடுபட்டோம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்