திருநெல்வேலி- தென்காசி இடையே உள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்தும் பணி தாமதமாகி வருவதால் தற்காலிகமாக சாலையை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி- தென்காசி இடையேயான நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.இதையடுத்து இச்சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரூ.480 கோடி ஒதுக்கீடு
கடந்த 2013-14-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த சாலை பணிக்கான அறிவிப்பு தமிழக முதல்வரால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 19.9.2014 அன்று இச்சாலைப் பணிக்காக ரூ.480.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் உலக வங்கியின் கடனுதவியுடன் மேம்படுத்தப்பட உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கி தென்காசி வரை 45.60 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் சாலையின் அகலம் 24 மீட்டர் முதல் 35 மீட்டர் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாலையில் பாவூர்சத்திரத்தில் 990 மீட்டர் தூரத்துக்கு மேம்பாலமும், பாவூர்சத்திரம், ஆலங்குளத்தில் சாலைகளின் ஓரத்தில் 5 மீட்டர் முதல் 5.50 மீட்டர் வரை அகலத்தில் அணுகு சாலைகளும் அமைக்கப்பட உள்ளன.
டெண்டர் ரத்து
சாலைப் பணியை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு முதல்கட்ட பணிகள் தொடங்கியது. சாலையோரம் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. ஆனால், ஒப்பந்ததாரர் தேவையான தகுதியை அடையாத காரணத்தால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதனால், வேறு எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை. 2-வது முறையாக கடந்த 20.11.2019-ல் ஒப்பந்தம் மீண்டும் கோரப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்யும் பணி நிறைவடையவில்லை.இதற்கிடையே இந்தச் சாலையை சீரமைத்து பல ஆண்டு கள் ஆனதால், கடுமையாக சேதமடைந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். எனவே, சாலையை மீண்டும் சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, தற்காலிகமாக சாலையில் பழுது பார்க்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தச் சாலை மோசமான நிலையில் இருப்பதால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் வரை பயணம் செய்ய சுமார் 2 மணி நேரம் வரை ஆகிறது. சாலையை தரமான முறையில் விரிவாக்கம் செய்தால் பயண நேரம், எரிபொருள் செலவு குறையும். பல்வேறு தொழில்களும் பெருகும். எனவே, நான்குவழிச் சாலை திட்டத்தை செயல்வடிவத்துக்கு கொண்டுவர துரிதமாக செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago