ஈரோடு மாவட்ட காவல்துறையின் தனிப்பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்கள், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எஸ்பி தங்கதுரை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 37 காவல்நிலையங்களிலும் தனிப்பிரிவின் சார்பில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள், அரசியல் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்த உளவுத்தகவல் அறிக்கையை எஸ்பிக்கு அளிப்பது இவர்களின் பணியாகும். நேரடியாக எஸ்பியின் கவனத்திற்கு அறிக்கைகளை அனுப்புவதால், தனிப்பிரிவு போலீஸாரை, காவல்நிலைய அதிகாரிகள் அனுசரித்துச் செல்லும் நிலை தொடர்கிறது.
மாவட்ட அளவில் தனிப்பிரிவில் நீண்டகாலம் பணிபுரியும் போலீஸார், அப்பகுதியில் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு துணைபோவதாகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடைத்தரகராக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஈரோடு நகர காவல்நிலையத்தில் தனிப்பிரிவு தலைமைக்காவலராக பணிபுரிந்து வந்த வேல்குமார் (48) மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்துள்ளாரா என்பதைக் கண்டறியும் வகையில், அவரது சொத்துக்களை மதிப்பீடு செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வேல்குமாரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி எஸ்பி தங்கதுரை உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தனிப்பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் போலீஸார் மற்றும் புகார்களுக்கு உள்ளான போலீஸார் குறித்தும் விசாரித்து வருவதாகவும், அதன் அடிப்படையில் தனிப்பிரிவு விரைவில் மாற்றியமைக்கப் படவுள்ளதாகவும் எஸ்பி தங்கதுரை தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago