நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியம், குடிநீர் வசதி, சாலை அமைத்தல், தொழிற்கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அமைச்சர் தங்கமணி பெற்றுக் கொண்டார். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக தீர்வுகாண வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.
பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 21 பயனாளிகளுக்கு முதியோர், மாற்றுத்திறனாளி மற்றும் விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார். மேலும், 12 மின் நுகர்வோர்களுக்கு மின் இணைப்பு பெயர் மாற்ற உத்தரவு ஆணைகளையும் அவர் வழங்கினார். குமாரபாளையம் ராஜராஜன் நகரில் ரூ.18 லட்சம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகளையும் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago