கர்நாடகாவிலிருந்து லாரியில் கடத்தல் பண்ணாரி சோதனைச் சாவடியில்ரூ.65 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

By செய்திப்பிரிவு

பண்ணாரி சோதனைச் சாவடியில் லாரியில் மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடியில் மறைத்து எடுத்து வரப்பட்ட ரூ.65 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்த பின்னர் அனுமதிக்கப்படுவது வழக்கம். நேற்று அதிகாலை சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான போலீஸார், பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, கர்நாடக மாநிலம் கொள்ளேகாலை அடுத்த ஹனூரில் இருந்து, மக்காச்சோளம் மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று வந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்குச் சென்ற அந்த லாரியில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில், மக்காச்சோள மூட்டைகளுக்கு இடையே, தடைசெய்யப்பட்ட குட்கா மூட்டைகள் மறைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் காந்தராஜ் (38), நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (30), பல்லடத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சுயம்புலிங்கம் (52) ஆகிய மூவரைக் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.65 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்