வேட்டவலம் அருகே விவசாயியை தாக்கி கிணற்றில் வீசி கொலை செய்து, ரூ.20 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த கீழ்கரிப்பூர் கிராமத்தில் வசித்தவர் விவசாயி குபேந்திரன்(48). இவர், கடந்த 20-ம் தேதி தனது விவசாய நிலத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் ராஜேஷ் கண்ணா கொடுத்த புகாரின் பேரில், வேட்டவலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், குபேந்திரன் பயன்படுத்திய செல்போன் எண்ணில் இருந்து ராஜேஷ் கண்ணாவுக்கு நேற்று முன்தினம் இரவு அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய நபர், ‘குபேந்திரனை கடத்தி வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும், காவல்துறையிடம் புகார் தெரிவித்தால் கொலை செய்துவிடுவோம், விழுப்புரம் பேருந்து நிலையத்துக்கு வந்து பணத்தை கொடுக்க வேண்டும்’ என கூறி இணைப்பை துண்டித் துள்ளனர்.
விழுப்புரத்தில் சுற்றி வளைப்பு
இந்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களது அறிவுரையின் பேரில், விழுப்புரம் பேருந்து நிலையத்துக்கு ஒரு பையுடன் ராஜேஷ் கண்ணா சென்றுள்ளார். அந்த பையில் பணம் மற்றும் காகித கட்டுகள் இருந்தன. அவரிடம் இருந்த பையை மர்ம கும்பல் பறித்துக் கொண்டு தப்பித்து செல்ல முயன்றபோது, மறைந்திருந்த காவல் துறையினர், 3 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில், தி.மலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் சீனிவாசன்(31), கரிப்பூர் கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி, வெண்ணியந்தல் கிராமத்தில் வசிக்கும் பாவாடை(28) ஆகியோர் என்பதும், அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து விவசாயி குபேந்திரனை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கீழ்கரிப்பூர் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் இருந்து குபேந்திரன் உடலை காவல் துறையினர் நேற்று மீட்டனர். வேட்டவலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
பணம் பறிக்க முயற்சி
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, “கைதான சீனிவாசன் உட்பட 3 பேரும் மது குடிப்பதற்காக கீழ் கரிப்பூர் கிராமத்தில் உள்ள குபேந்திரனின் விவசாய நிலத்துக்கு கடந்த 20-ம் தேதி வரவழைத்துள்ளனர்.பின்னர், குபேந்திரனுக்கு அதிகளவில் மது கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவரை கடத்தி சென்று பணம் பறிக்க முயன்றனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் குபேந்திரனை சரமாரியாக தாக்கி யுள்ளனர்.
மேலும், அவர்கள் அவரது கை, கால்களை கட்டிப்போட்டு கிணற்றில் வீசி உள்ளனர். அப்போது அவரிடம் இருந்து செல்போனை எடுத்து சென்றவர்கள், அவரது குடும்பத்திடம் இருந்து பணத்தை பறிக்க திட்டமிட்டு, குபேந்திரன் உயிரோடு இருப்பதாக கூறி நாடகமாடியுள்ளனர். கிணற்றில் வீசப்படுவதற்கு முன்பு குபேந்திரன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது உயிரோடு கிணற்றில் வீசி கொலை செய்தார்களா? என பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago