கோபியை அடுத்த கூகலூர் அரசு நெல் கொள்முதல் மையத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்ட நெல்மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை விவசாயிகள் சிறை பிடித்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை மற்றும் கீழ்பவானி பாசனப் பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடந்தது.
இப்பகுதிகளில் 22 இடங்களில் அரசு நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் அறுவடைப் பணி முடிவடைந்ததால்,நெல் கொள்முதல் மையங்கள் மூடப்பட்டுள்ளன. தாமதமாக அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் இரண்டு நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் செயல்படுகின்றன.
இந்நிலையில் திருவண் ணாமலை, தஞ்சாவூர், அரூர், ஆரணி போன்ற பகுதிகளிலிருந்து கோபியில் உள்ள நெல் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லினை வாங்கி வந்து, கோபி அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து வெளிமாவட்ட நெல் விற்பனைக்கு வருகிறதா என்பதை கண்டறிய விவசாயிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கூகலூர் பகுதியில் நெல் மூட்டைகளுடன் சென்ற லாரியை விவசாயிகள் மடிக்கிப் பிடித்தனர். அப்போது லாரியிலிருந்து இருவர் தப்பியோடிய நிலையில், லாரி ஓட்டுநர் மட்டும் பிடிபட்டார்.
விசாரணையில், திருவண்ணா மலை மாவட்டத்திலிருந்து குறைந்த விலைக்கு நெல்லை வாங்கிய வியாபாரிகள், கோபி கூகலூரில் செயல்படும் அரசு நெல்கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து, நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியை விவசாயிகள் சிறைபிடித்தனர்.
வருவாய்த்துறையினர் நடத்திய விசாரணையில், போலி ஆவணங்கள் மூலம் நெல் எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. ஈரோடு ஆட்சியர் உத்தரவின் பேரில், நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோபி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago