கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 513 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தம் பல்வேறு நடவடிக்கைகளால் பாலின விகிதமும் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

`பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம்’ திட்டம் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டுதொடக்கம் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில், இம்மாவட்டத்தில் 531 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறை சார்பில் ’பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்று பல்வேறு துறை அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட பல்வேறுதுறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழை வழங்கினார்.

14 ஸ்கேன் சென்டர்கள் மூடல்

பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்ததாவது.

நமது நாட்டில் பெண் குழந்தையின் பாலின விகிதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்களில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த நமது கடலூர் மாவட்டமும் ஒன்று.

கடந்த, 24.01.2015 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பண்ருட்டி வட்டாரத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தைகளைக் காப்பது. அதன்படி, கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிவதை தடை செய்தல், இச்சட்டத்தினை மீறுவோர் மீது கடுமையான தண்டனை வழங்குதல். பாலினப் பாகுப்பாட்டை குறைத்தல், பெண் குழந்தையின் கல்வி மற்றும் சமுதாயப் பங்கேற்பினை உறுதி செய்தல் ஆகும்.

இதன்படி கடந்த 6 ஆண்டுகளில், கடலூர் மாவட்டத்தில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து, தெரிவித்த 14 ஸ்கேன் சென்டர்கள் மூடப்பட்டுள்ளன. 683 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 2,342 கிராமங்களில் பெண் மற்றும் ஆண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை மற்றும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அறிய உதவும் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

158 குழந்தைகள் மீட்பு

இத்திட்டத்தினை பரப்புரை செய்ய 322 வளர் இளம் பெண்கள் திட்ட தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 513 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தொட்டில் குழந்தை திட்டத்தில் 158 குழந்தைகள் மீட்கப் பட்டுள்ளனர். அதில் 111 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக் கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கையின் மூலம் பிறப்பின் படி பெண் குழந்தை பாலின விகிதம் 2015ம் ஆண்டு 886 லிருந்து 2020ம் ஆண்டு 940 ஆக அதிகரித்துள்ளது.

பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் குறைவாக உள்ள வட்டாரங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் குறித்து ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது.

பெண் குழந்தைகளின் கல்விவிகிதத்தை முன்னேற்றம் செய்வதுதனி மனித கடமையல்ல; ஒட்டு மொத்த சமூக பொறுப்பாக கொண்டு அனைவரும் நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.

இணை இயக்குநர் (நலப்பணிகள்) ரமேஷ்பாபு, மாவட்டசமூகநல அலுவலர் அன்பழகன், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி) பழனி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்