திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழாவில் டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இம்மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான அறிமுக விழா நேற்று நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். துணை முதல்வர் சாந்தாராம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளில் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியும் ஒன்று. கடந்த 1964-ல் தொடங்கப்பட்ட இக் கல்லூரியில் முதலில் 75 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அப்போது தூய சவேரியார் கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் நடைபெற்றன. பின்னர் மருத்துவ கல்லூரிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு வகுப்புகள் தொடங்கின.
1980-ம் ஆண்டு மாணவர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு இது 250 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இம்மருத்துவக் கல்லூரியில் பல்வேறு துறைகள், ஆராய்ச்சிப் படிப்புகள் உள்ளன. மேலும் கல்லீரல், இருதய மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவும் அனுமதி கிடைத்துள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து தினமும் 5,000 புறநோயாளிகளும், 2,500 உள்நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள்.
மாணவ, மாணவிகள் சிறப்பாக படித்து ஏழைகளுக்கு மருத்துவ சேவையாற்றும் குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் சிறந்த மருத்துவ வல்லுநர்களாக உருவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago