கோபியில் 200-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 6-ம் தேதி நடக்கிறது.
கோபி தனியார் மண்டபத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், கோபி முத்து மஹால் மற்றும் ராமாயம்மாள் திருமண மண்டபங்களில் பிப்ரவரி 6-ம் தேதி கோபியில் நடக்கிறது. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ போன்ற தொழிற்சார்ந்த கல்வி பயின்றவர்கள் முகாமில் பங்கேற்கலாம். 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளன.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் அடையாள அட்டையினை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். பங்கேற்பாளர்களுக்கு பேருந்து வசதி, உணவு வசதி ஏற்பாடு செய்யப்படவுள்ளது. வேலைக்கு செல்லாத இளைஞர்கள் தங்கள் வீட்டில் இருந்து பணிகளை ஆற்ற வேண்டும் என்றாலும் அதற்கான கடனுதவியும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
கோபி தொகுதியில் 7000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், கொளப்பலூரில் உள்ள தாழ்குனி ஊராட்சியில் 32 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது.
மேலும், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, புதிய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை, வங்கிக்கடன் பெறுவதற்கான வ்ழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, கோவை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஆ.லதா, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் ம.மகேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொழில்நெறி வழிகாட்டும் பணி) டி.ஜோதி, கோபி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago