உவரியில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறும். இவ்வாண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக சிறப்பு பூஜைகளுடன் கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விஷ்வ இந்து பரிஷத் மாநில தலைவர் பெரி குழைக்காதர், முன்னாள் மாநில தலைவர் எம்.ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இத் திருவிழா வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பணகுடி

பணகுடி சிவகாமி அம்பாள் சமேத ராமலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. வரும் 27-ம் தேதி தேர்த்திருவிழா, 28-ம் தேதி தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறுகின்றன.

திருப்புடைமருதூரில் 28-ல் தீர்த்தவாரி

திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாத சுவாமி கோயிலில் புகழ்பெற்ற தைப்பூச தீர்த்தவாரி உற்சவம் வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது.

இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. வரும் 25-ம் தேதி மாலை சிவப்பு சார்த்தியும், 26-ம் தேதி காலை வெள்ளை சார்த்தியும், மாலையில் பச்சை சார்த்தியும் சுவாமி வீதியுலா வருகிறார்.

வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. அன்று மாலை புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தீர்த்தவாரி உற்சவம் வரும் 28-ம் தேதி மதியம் 1.15 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது, தாமிரபரணி கரையில் அமைந்துள்ள தைப்பூச மண்டபத்துக்கு சுவாமியும், அம்பாளும் எழுந்தருள, அங்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சுவாமிக்கு ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். அன்று காலை முதல் வீரவநல்லூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்