பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப் பட்ட குட்கா, பான்மசாலா பார்சலை கடத்தியதாக 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர்கள் ராஜசேகர், ஜெகநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிள் சர்வீஸ் சாலையில் நேற்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூரு பதிவெண்கொண்ட சரக்கு வாகனத்தை சந்தேகத்தின்பேரில் நிறுத்திய காவலர்கள் விசாரணை செய்தனர். வாகன ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
இதையடுத்து, வாகனத்தை சோதனை செய்ததில் தக்காளி பிளாஸ்டிக் டிரேக்களுக்கு மத்தியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் அடங்கிய பார்சல்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, வாகன ஓட்டுநர் உள்ளிட்ட இரண்டு பேரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், வாகனத்தின் ஓட்டுநர் திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி பகுதியைச் சேர்ந்த ஹைதர் அலி (36) என்பதும், அவருடன் இருந்தவர் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியைச் சேர்ந்த பார்தான் (35) என்பது தெரியவந்தது.
இவர்கள் பெங்களூருவிலிந்து சென்னைக்கு குட்கா பார்சலை கடத்திச் செல்வதாகவும், பார்சல் சேர வேண்டிய நபரின் செல்போன் எண் மட்டும் தங்களிடம் இருப்பதாக கூறி யுள்ளனர். அந்த எண் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில், ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பார்சலை சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்ததுடன் ஹைதர் அலி, பார்தான் ஆகியோரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago