ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையத்தில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் முதல் நீரேற்று நிலையப்பணிகளை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
திட்டப்பணிகளின் நிலை குறித்து அமைச்சர்கள் கூறியதாவது:
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1652 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கான பணிகள் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கியது. இத்திட்டப்படி பவானி ஆற்றில் காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டுக்கு 1.50 டி.எம்.சி. உபரிநீரை, நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதித்து கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நீரினைக் கொண்டு 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில், 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படவுள்ளன.
இந்தத் திட்டம் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 6 நீரேற்று மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் 58 சதவீதம் முடிந்துள்ளன.
திருப்பணை மற்றும் முதல் மூன்று நீர் உந்து நிலையங்கள் முதல்கட்டமாக முடிக்கப்பட்டு, பெருந்துறை பகுதியில் உள்ள 61 குளம், குட்டைகளுக்கு விரைவில் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலம் பயன்பாட்டு உரிமை பெறும் பணி 82 சதவீதம் முடிவுற்றுள்ளது. திட்டப்பணிகளுக்காக இதுவரை ரூ.922.33 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றனர்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா உள்ளிட்ட அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago