நதிகள் இணைப்பின் முன்னோடி காலிங்கராயன் தினத்தையொட்டி சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

By செய்திப்பிரிவு

நதிகள் இணைப்பின் முன்னோடி யாக விளங்கிய காலிங்கராயன் தினத்தையொட்டி, அவரது மணிமண்டபத்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கனகபுரம் கிராமத்தில் பிறந்த காலிங்கராயன், வீரபாண்டியன் படையின் தளபதியாகி, கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்தவராவார். இவரது தனி மனித முயற்சியால் கி.பி 1282-ம் ஆண்டு, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, காலிங்கராயன் பாளையத்திலிருந்து ஆவுடையார்பாறை வரை 56.5 மைல் நீளமுள்ள வாய்க்காலை வெட்டினார். இந்த வாய்க்காலில், 786 மதகுகள் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றன.

கால்வாய் மூலமாக பவானி ஆற்றை நொய்யல் மற்றும் அமராவதி ஆற்றோடு இணைத்து, நதிகள் இணைப்புத் திட்டத்தின் முன்னோடியாக காலிங்கராயன் விளங்கினார். மேலும், காலிங்கராயன் கால்வாயை தை மாதம் 5-ம் தேதியன்று பொதுமக்களுக்கு அர்ப்பணித்துவிட்டு, தானோ தன் வாரிசுகளோ தண்ணீரை பயன்படுத்தமாட்டோம் என்று பொள்ளாச்சி ஊத்துக்குளிக்கு இடம்பெயர்ந்த பெருமைக்குரியவர்.

தமிழக அரசின் சார்பில் பவானி காலிங்கராயன்பாளையத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு, அவருக்கு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதோடு தை மாதம் 5-வது நாள் ஆண்டுதோறும் அரசின் சார்பில் காலிங்கராயன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று காலிங்கராயன் தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் சி.கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, எஸ்.ஈஸ்வரன், வி.பி.சிவசுப்பிரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார், ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணைமேயர் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில், ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, நிர்வாகிகள் வி.சி.சந்திரகுமார், குறிஞ்சி சிவகுமார் உள்ளிட்டோர் காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில விவசாயிகள் பிரிவு தலைவர் ஜி.கே.நாகராஜ், கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினர், பாசன விவசாயிகள், பொதுமக்கள் காலிங்கராயனுக்கு மரியாதை செலுத்தினர்.

வெள்ளோட்டில் அமைந்துள்ள காலிங்கராயன் சிலைக்கும் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர். காலிங்கராயன் கால்வாய் பாசனப்பகுதிகளில், கால்வாயில் மலர்களைத் தூவியும், படத்திற்கு மரியாதை செலுத்தியும் ஏராளமான விவசாயிகள் அவரது நினைவைப் போற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்