திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 1,369 பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. கரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர்கள் ஆலோசனை நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 312 பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்டஆட்சியர் வே. விஷ்ணு ஆலோசனை மேற்கொண்டார். மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் 312 அரசு, அரசு உதவிபெறும், தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படவுள்ளன. அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்து பள்ளிக்கு வர வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் மூலம் முறையாக பரிசோதனை செய்ய வேண்டும்.
கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் கூடாது. நீச்சல்குளங்கள் இருந்தால் பயன்படுத்தக் கூடாது. மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் தொட்டுணர் வருகை பதிவு (பயோ மெட்ரிக்) கருவி பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.
உதவி ஆட்சியர் (பயிற்சி) அலர்மேல் மங்கை உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகள், 76 அரசு உதவிபெறும் பள்ளிகள், 88 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 242 பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. பள்ளி வளாகங்கள், குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்த ஏற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறையின் சமக்ரா சிக்சா அபியான் திட்ட கூடுதல் இயக்குநர் அமிர்தஜோதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமி ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 328 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், முதன்மை கல்வி அலுவலர் அ.ஞானகவுரி மேற்பார்வையில் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாணவ, மாணவியருக்கு தலா 10 மாத்திரைகள் வீதம்வழங்குவதற்காக 4.58 லட்சம் துத்தநாக மாத்திரைகள், 4.58 ஆயிரம் மல்டி விட்டமின் மாத்திரை கள் தயாராக உள்ளன.மேலும், பள்ளிகள் திறப்பை கண்காணிக்க பள்ளிக்கல்வி மாநிலதிட்ட உதவி இயக்குநர் அமிர்தஜோதி, அரசு தேர்வுத்துறை இணைஇயக்குநர் பொன்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
`மழைநீர் குளம் போல தேங்கிநிற்கும் பள்ளிகள் இன்று திறக்கப்படாது. மழைநீர் வடிந்த பிறகு இந்தபள்ளிகளை திறந்து கொள்ளலாம். அதுவரை ஆன்லைன் மூலம் தொடர்ந்து பாடங்களை நடத்த வேண்டும்’என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என, 487 பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. பள்ளிகளில் கிருமி நாசினிதெளித்து தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago