இருசக்கர வாகனத்தில் ‘லிப்ட்’ கொடுத்த மாணவியை மிரட்டி சங்கிலி பறிப்பு

By செய்திப்பிரிவு

கரூர் அருகேயுள்ள எஸ்.வெள் ளாளப்பட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ஸ்ருதி நிவேதா (21).கல்லூரி மாணவி. இவர் கடந்த 12-ம் தேதி கரூரிலிருந்து மொபட்டில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர், ஸ்ருதி நிவேதாவிடம் அழுதுகொண்டே ‘லிப்ட்’ கேட்டுள்ளார்.

அப்போது, அந்தப் பெண், தனது கணவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், தன்னை வெங்கமேடு ரயில்வே பாலம் கீழே இறக்கி விடும்படியும் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணை ஸ்ருதி நிவேதா தனது மொபட்டில் ஏற்றிக் கொண்டு வெங்கமேடு ரயில்வே பாலம் பகுதிக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த 3 ஆண்களுடன் சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி, ஸ்ருதி நிவேதா அணிந்திருந்த மூன்றே கால் பவுன் சங்கிலி, வெள்ளிக்காப்பு, ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்த ஸ்ருதிநிவேதா நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில் கரூர் நகர போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE