திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. 4 மாவட்டங்களிலும் முதல் கட்டமாக 46,314 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில். முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும், 2-ம் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், 3-ம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட தொற்றா நோய் உள்ளவர்களுக்கும், 4-ம் கட்டமாக பொதுமக்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி போடப்படும்.
மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலா 100 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதன் பொருட்டு 15,100 டோஸ் கோவிட் வேக்ஸின் மற்றும் 66 ஆயிரம் ஏடி சிரிஞ்கள் வரப்பெற்றுள்ளன. முதல் கட்டமாக 7,550 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்று தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் டாக்டர் எம். ரவிச்சந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மு.வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தென்காசி
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை, சொக்கம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பாவூர்சத்திரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மையத்துக்கு 100 சுகாதார பணியாளர்கள் வீதம் கரோனா தடுப்பபூசி போடப்பட உள்ளது.
தென்காசி மாவட்டத்துக்கு 5100 டோஸ் கோவிட் தடுப்பூசி, 51,400 ஏடி சிரிஞ்ச்கள் வரப்பெற்றுள்ளன. தற்போது மாவட்டத்தில் 5,100 சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்து உள்ளனர் எனக் கூறினார். நிகழ்ச்சியில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கலுசிவலிங்கம், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தொடங்கிவைத்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 மையங்களில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில் 480 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.தூத்துக்குடி சுகாதார மாவட்டத்துக்கு 9,300 டோஸ், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு 3,800 டோஸ் தடுப்பூசி மருந்து வந்துள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. ஒவ்வொரு மையத்திலும் தலா 120 பேர் என மொத்தம் 480 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
திருச்செந்தூரில் இப்பணியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஆட்சியர் கூறியதாவது:
தடுப்பூசியை இருமுறை போட வேண்டும். ஒரு முறை போட்ட பின்பு 28 நாட்கள் கழித்து, அதே நபருக்கு, அதே மையத்தில் அடுத்த டோஸ் தடுப்பூசி போடப்படும். ஒவ்வொரு முறையும் 0.5 மிலி அளவுக்கு மருந்து போடப்படும் என்றார் ஆட்சியர்.
சுகாதாரத்துறை இணை இயக்குநர் முருகையா, துணை இயக்குநர் கீதா, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் பொன்ரவி, கோட்டாட்சியர் தனப்பிரியா மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர் முருகபெருமாளுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது. டீன் ரேவதி பாலன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, துணை கண்காணிப்பாளர் குமரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, மருத்துவத் துறை இணை பேராசிரியர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்
கரோனா தடுப்பூசி போடும் பணியை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தொடங்கிவைத்தார். அவர் கூறியதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம், பத்மநாபபுரம் மற்றும் குழித்துறை அரசு மருத்துவமனைகள், செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 முகாம்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. 20,564 மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 22,600 டோஸ்கள் வந்துள்ளன என்றார். மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.4 மாவட்டங்களிலும் முதல் கட்டமாக 46,314 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago