வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பொங்கல் பண்டிகையை யொட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காணும் பொங்கலையொட்டி வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு, சோழவரம் மற்றும் ரங்காபுரத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது.
மூஞ்சூர்பட்டு சின்னத்தெருவில் எருது விடும் விழா நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.முன்னதாக, போட்டியில் கலந்து கொள்ள வந்த காளைகளை கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்து தகுதிச்சான்றிதழ் வழங்கினர். இதைத்தொடர்ந்து, காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் அனைவரும் வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இவ்விழாவில் வேலூர், அரியூர், ஊசூர், அணைக் கட்டு, நெல்வாயல், கணியம்பாடி, சித்தேரி, அடுக்கம்பாறை, மூஞ்சூர் பட்டு, பாகாயம், தொரப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 150 காளைகள் கலந்து கொண்டன.
குறிப்பிட்ட தூரத்தை விரைவாக கடந்துச்சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு விழாக் குழுவினர் சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், மாடுகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். அவர்கள், உடனடியாக மீட்கப்பட்டு அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வேலூர் கிராமிய காவல் துறையினர் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட் டனர்.
அதேபோல, சோழவரம் பகுதியில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 100 காளைகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிபாய்ந்து ஓடின. காளைகளை பின்தொடர்ந்து ஓடிய இளைஞர்கள் காளைகளை பிடிக்க முயன்றனர். இதில், 12 பேர் காயமடைந்தனர். அவர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
மேலும், ரங்காபுரத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில், வேடிக்கை பார்க்க திரண்ட 10 பேர் மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தோக்கியம் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. திருப் பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி விழாவுக்கு தலைமை வகித்தார். இதில், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆந்திரமாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 115 காளைகள் கலந்து கொண்டன.இதில், மாடு முட்டியதில் 10 பேர் காயமடைந்ததையொட்டி அவர்கள் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி கிராமத்திலும் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், 100 காளைகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடின. விழாவை காண வந்த 15 பேர் மாடு முட்டி காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 இடங்களில் நடைபெற்ற எருது விடும் விழாவில், டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago