விழுப்புரம் மாவட்டத்தில் இன்று முதல் 4 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை, சிறுவந்தாடு, ராதாபுரம் வட்டார சுகாதார நிலையங்கள் ஆகிய 4 இடங்களில் இன்று முதல் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தினமும் மையத்திற்கு தலா 100 பேர் வீதம் 4 மையங்களில் 400 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. முன் களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என விருப்பத்தின் பேரில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இந்த ஊசி போடப்படுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த ஊசி போடப்படும். 28 நாட்களுக்கு பிறகு 2-வது ஊசி போடப்படும். அதன்பின் 2 வாரங்களுக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்று சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கரோனா தடுப்பூசி பணிகள் குறித்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா நோய் தொற்று இறங்கு முகத்திலிருந் தாலும் நாம் அதைத் தொடர்ந்து கண்காணித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
இன்று (ஜன.16) தேசிய அளவில் தடுப்பூசி பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்த பிறகு தமிழகத்தில் முதல்வர் தடுப்பூசி பணியை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் இன்று (ஜன.16) தொடங்கி வரும் 25-ம் தேதி வரை 166 இடங்களில் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முக கனி, துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago