சேலம், ஈரோடு, தருமபுரியில் இன்று முதல் கரோனா தடுப்பூசி

By செய்திப்பிரிவு

சேலம் சுகாதார மாவட்டத்தில் 20,794 நபர்கள், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 4,524 நபர்கள் என சேலம் மாவட்டத்தில் மொத்தம் 25,318 நபர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கென சேலம் மாவட்டத்துக்கு 27,800 கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. அவை, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை, மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்பட 12 தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தின் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ராமன் நேற்று ஆய்வு செய்தார்.

ஈரோட்டில் 13800 பேர்

ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 13 ஆயிரத்து 800 பேருக்கு கரோனா தடுப்பூசி போடும் மருந்துகள் வந்துள்ளன. இவை 86 குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இன்று (16-ம் தேதி) முதல் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பவானி அரசு மருத்துவமனை, கோபி அரசு மருத்துவமனை, சிறுவல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது, என்று ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தருமபுரியில் 4 மையங்கள்

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு தடுப்பூசி செலுத்திக் கொள்ள 11 ஆயிரத்து 850 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 11 ஆயிரத்து 800 கரோனா தொற்று தடுப்பூசிகள் வந்துள்ளன. இவற்றில் முன் களப் பணியாளர்கள் 400 பேருக்கு இன்று (16-ம் தேதி) தடுப்பூசி செலுத்தும் முகாம் நடக்கிறது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரூர் அரசு மருத்துவமனை, மொரப்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் இதற்கான முகாம் நடக்க உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்