நாமக்கல் மாவட்டத்தில் விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏழு இடங்களில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர் மாவட்டத்தில் இருந்து சட்டீஸ்கர் மாநிலம் வரை மின்சாரம் கொண்டு செல்வதற்காக நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் சங்க செயலாளர் படைவீடு பெருமாள் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம் வட்டங்களில் உள்ள விளை நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் 6-வது நாளாகப் போராடி வருகின்றனர். குமாரபாளையம் அருகே சவுதாபுரம் மக்கிரிபாளையம் முதல் முடையூர் வரையிலும், அருவாபுலியூர், பண்ணாடிக்காடு உள்ளிட்ட ஏழு மையங்களில் வயல்வெளியில் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்களை போலீஸாரும், வருவாய்துறையினரும் மிரட்டி வருகின்றனர். மின் கோபுரம் அமைப்பதால் பாதிக்கப்படும் தென்னை மரத்திற்கான தொகை 36 ஆயிரத்து 450 என அறிவித்த நிலையில், தற்போது 29 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. சிறு தென்னங் கன்றுகளுக்கு மூவாயிரம் ரூபாய் என அறிவித்து, 950 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.
மேலும் தேக்குமரம், ஆழ்குழாய்கிணறு, கிணறு, கட்டிடம் மற்றும் வயல்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை. அரசு அறிவித்த அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டம் முழுவதும் 10 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago