திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவழித்துள்ள நிலையில், தொடர் மழையால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி, முளைவிடதொடங்கி உள்ளன.

மேலும், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து வேளாண் துறை அலுவலர்கள் கூறும்போது, “மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மட்டுமின்றி வாழை, கரும்பு மற்றும் மானாவாரி பயிர்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருச்சி எடமலைப்பட்டிப்புதூரை அடுத்த ராமச்சந்திர நகரில் உள்ள சித்தி விநாயகர் நகர், அஞ்சலி நகர், கிருஷ்ணவேணி நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை கடந்த 5 நாட்களுக்கும் மேலாக மழைநீர் சூழ்ந்துள்ளது.

மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இதேபோல, எடமலைப்பட்டிப்புதூரை அடுத்த ராஜீவ் காந்தி நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அப் பகுதி மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்