பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 50 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால், கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் கடந்த சில நாட்களுக்குமுன் நிரம்பியதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால், அணைகளுக்கு நீர்வரத்து பெருமளவு அதிகரித்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து நேற்றுமுன்தினம் இரவில் 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்துவிடப்பட்டது. அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
வெள்ளத்தில் மிதந்த வீடுகள்
திருநெல்வேலியில் தாமிரபரணி கரையோரத்தில் கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணார்பேட்டை ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. வண்ணார்பேட்டையில் எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்பு தொண்டர் தெரு, இசக்கியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. அப்பகுதி மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். ரப்பர் படகுகள் மூலம் கால்நடைகளும் மீட்கப்பட்டன.
தொடர் மழையால் மாவட்டத்தில் 3 வீடுகள், தாமிரபரணி கரையோரத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்ட சில உறை கிணறுகள் சேதமடைந்தன.
சேரன்மகாதேவி, திருப்புடைமருதூர், வைராவிகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், திருநெல்வேலி அருகே கொண்டாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாமிரபரணி கரையோர வயல்களிலும் வெள்ளம் புகுந்ததால், நெற்பயிர்கள் மூழ்கின.
திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலின் கோபுரத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் தாமிரபரணியில் பெருக்கெடுத்தது.
அமைச்சர் ஆய்வு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம், வண்ணார்பேட்டை சாலை தெரு, எட்டுத்தொகை தெரு, டவுன் கருப்பந்துறை, சிஎன் கிராமம், நாரணம்மாள்புரம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேலப்பாளையம்- டவுன் சாலையிலுள்ள கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை ஒட்டி தண்ணீர் பாய்வதால், அச்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சேரன்மகாதேவி பகுதியில் ஏற்பட்ட மழை பாதிப்பு, மணிமுத்தாறு அணைப்பகுதியை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி நேற்று ஆய்வு செய்தார்.
===========================================================
மீட்பு பணியில் கடற்படை வீரர்கள்
-----------------------------------------
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து வெள்ள நிலவரங்களை ஆய்வு செய்த ஆட்சியர் விஷ்ணு கூறியதாவது:
பாபநாசம் அணையிலிருந்து 15,700 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 15,446 கனஅடி, கடனா அணையிலிருந்து 1,212 கனஅடி என, மொத்தம் 32,358 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் திறந்துவிடப்பட்டிருந்தது. அன்று இரவு 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை திறந்துவிடப்பட்டது.
விஜயநாராயணம் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளத்திலிருந்து 35 கடற்படை வீரர்கள் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 50 பேரும் விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தண்ணீர் வடிந்த பின்னர் பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுக்கப்படும். உறை கிணறுகள் தண்ணீரில் மூழ்கி விட்டதால், குடிநீர் விநியோகம் பாதிக்காமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 227 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 188 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்றார் அவர்.
==========================================================
மழை அளவு, அணைகள் நிலவரம்
--------------------------
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி. மீட்டரில்): பாபநாசம்- 185, சேர்வலாறு- 110, மணிமுத்தாறு- 165, நம்பியாறு- 45, கொடுமுடியாறு- 30, அம்பாசமுத்திரம்- 97, சேரன்மகாதேவி- 65.40, நாங்குநேரி- 32, ராதாபுரம்- 28, பாளையங்கோட்டை- 26, திருநெல்வேலி- 23, களக்காடு- 106, மூலக்கரைப்பட்டி- 25.
அணைகளின் நீர்மட்டம் விவரம் (அடைப்புக்குள் உச்ச நீர்மட்டம்): பாபநாசம்- 142.5 (143), மணிமுத்தாறு- 117.18 (118), சேர்வலாறு- 148.55 (156), வடக்கு பச்சையாறு- 40 (49), நம்பியாறு- 11.32 (22.96), கொடுமுடியாறு- 36.25 (52.50).
=================================================
குற்றாலத்தில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு
-----------------------------------------
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணையில் 75 மி.மீ. மழை பதிவானது. ராமநதி அணையில் 25 மி.மீ., செங்கோட்டையில் 21 மி.மீ., கருப்பாநதி அணையில் 16 மி.மீ., தென்காசியில் 14.40 மி.மீ., குண்டாறு அணை, அடவிநயினார் அணையில் தலா 14 மி.மீ., சங்கரன்கோவிலில் 10 மி.மீ., சிவகிரியில் 8.40 மி.மீ. மழை பதிவானது.
தொடர் மழையால் கடனாநதி அணை, ராமநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால், இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
நேற்று கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 1,625 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 226 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 31 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 66.88 அடியில் நிலைநிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்த அணையில் இருந்து விநாடிக்கு 164 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 5.50 அடி உயர்ந்து 80 அடியாக இருந்தது. குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago