வானூர் அருகே ஆட்டோ மீது மின்கம்பம் முறிந்து விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
வானூர் அருகே கொஞ்சிமங்கலம் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு செல்லும் மின் கம்பங்கள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து பழுதடைந்த நிலையில் உள்ளன. கிளியனூர் மின்வாரிய அலுவலகத்திற்கு பலமுறை விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கொஞ்சிமங்கலம் கிராமத்தில் இருந்து பழைய கொஞ்சி மங்கலம் கிராமத்திற்கு நேற்று ஆட்டோ சென்றது. அப்போது சாலையோரம் சாய்வான நிலையில் இருந்த மின்கம்பம் திடீரென முறிந்து ஆட்டோ மீது விழுந்தது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் கிளியனூரைச் சேர்ந்த மதிவாணன்(31) படுகாயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து கிளியனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இத்தகவல் அறிந்த கிளியனூர் மின்வாரிய ஊழியர்கள் முறிந்து விழுந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தினர். கொஞ்சி மங்கலத்திலிருந்து பழையூர் எடச்சேரி செல்லும் வழியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும் மின்கம்பங்கள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சாய்ந்த நிலையில் உள்ளன. இனியாவது பழுதடைந்த பழைய கம்பங்களை மாற்றிவிட்டு புதிய கம்பங்களை நட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago