திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து வகையான பயிர்களையும் முறையாக கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது. மாவட்டம் முழுவதும் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலிருந்து விவசாயிகள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர். கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
கவண்டம்பட்டி சுப்பிரமணியன்: முசிறிக்கும், மருதூருக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக கதவணை அமைத்து 1.5 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். இதன் மூலம் உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசனத்துக்கும், இருகரைகளிலும் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் பயன்படும்.
பூ.விசுவநாதன்: தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து வகையான பயிர்களையும் முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பெருவளை, புள்ளம்பாடி வாய்க்கால்கள் மூலமாக அரியாறு கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் காவிரி நீரை சேமித்து, அந்த பகுதிகளில் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டத்தில் பேசிய பல விவசாயிகள் அடுத்த மாதம் வழக்கம் போல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதேபோன்று அந்தந்த வட்டாரங்களில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர் அலுவலகங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.
விவசாயிகள் கோரிக்கைகளுக்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago