முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆதரவளித்தால் தமிழகத்தில் புதிய சரித்திரம் படைப்போம் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
கோவை மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன் நேற்று துடியலூர், அன்னூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவர் பேசும்போது, “தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கப் போகிறவர்கள், அரை நூற்றாண்டுகால தமிழக சரித்திரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள். முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆதரவளித்தால் புதிய சரித்திரம் படைக்கலாம்.
அதேபோல, ராஜ விசுவாசம் என்று நினைத்துக்கொண்டு, செய்த தவறையே மீண்டும் செய்து கொண்டிருக்கும் முந்தைய தலைமுறையின் மனதையும் மாற்றி, புதிய மாற்றத்துக்காக வாக்களிக்கச் செய்ய வேண்டும். சாதி பார்த்து வாக்களிக்காமல், சாதிப்பவர்களைப் பார்த்து வாக்களிக்க வேண்டும்” என்றார்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம், திருப்பூர் சிடிசி கார்னர், அனுப்பர்பாளையம்புதூர் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல் கட்சிகளுக்கு இடையே நடக்கும் போர் அல்ல. நேர்மைக்கும், ஊழலுக்கும் இடையே நடக்கும் போர். மக்களின் வாக்கு, நேர்மையின் பக்கம் இருக்க வேண்டும். பண முதலைகளிடமிருந்து தமிழகத்தை மீட்க மக்கள் உதவ வேண்டும்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக மழை பெய்தாலும், தமிழகத்தில் குடிநீர்ப் பஞ்சம் நிலவுகிறது. திருப்பூரில் நொய்யல் நதியைப் பார்த்து நொந்துபோனேன். இவற்றையெல்லாம் மக்கள் நீதி மய்யம் சீரமைக்கும்.
திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியிருந்தாலும், இன்னும் மருத்துவமனை அமைக்கப்படவில்லை. இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றுவதே எங்கள் திட்டம். இன்னும் மூன்று மாதங்களில் மக்கள் எடுக்கும் முடிவு, மாற்றத்துக்கான தொடக்கமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago