பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 4,200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியிருக்கும் நிலையில் இவற்றுக்கு வரும் தண்ணீர் உபரியாக திறந்து விடப்படுகிறது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நேற்று காலையில் நீர்மட்டம் 142.15 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,322.37 கனஅடி தண்ணீர்வந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 117.50 அடியாக இருந்தது. அணைக்கு 2,050 கனஅடி தண்ணீர் வருகிறது.
பாபநாசம் அணையிலிருந்து 2,182.55 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 2,038 கனஅடி என மொத்தம் 4,220 கனஅடி தண்ணீர்தாமிரபரணியில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாதுகாப்பு கருதி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும், ஆற்றங்கரையில் புகைப்படம், செல்பி எடுக்கவும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், ஆற்றங்கரையை ஒட்டி தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்திலுள்ள மற்ற அணைகளின் நீர் மட்டம் விவரம்:
சேர்வலாறு- 141.57 அடி, வடக்கு பச்சையாறு- 32 அடி, நம்பியாறு- 10.62 அடி, கொடுமுடியாறு- 27 அடி. அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 18, சேர்வலாறு- 12,மணிமுத்தாறு- 19, நம்பியாறு- 22,கொடுமுடியாறு- 35, அம்பாசமுத்திரம்- 14.50, சேரன்மகாதேவி- 24.60, நாங்குநேரி- 19.50, ராதாபுரம்- 15, களக்காடு- 52.2, மூலக்கரைப்பட்டி- 35, பாளையங்கோட்டை- 20, திருநெல்வேலி- 40.
ராமநதி அணையும் நிரம்பியது
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் ராமநதி அணையில் 8 மி.மீ., கடனாநதி அணையில் 5, அடவிநயினார் அணையில் 3, கருப்பாநதி அணை, ஆய்க்குடியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.
தொடர் மழையால் கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால் இவற்றுக்கு வரும்நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், 84 அடி உயரம் உள்ள ராமநதி அணையும் நிரம்பியது. பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 83 அடியில் நிலை நிறுத்தப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.93 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 74 அடியாகவும் இருந்தது.
குற்றாலத்தில் அனைத்து அருவி களிலும் தண்ணீர் ஆர்ப்பரித் துக் கொட்டியது. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago