திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் தாலுகாவில் சிவந்திபுரம்ஊராட்சிக்கு உட்பட்ட புலவன்பட்டி பகுதியில் இணைப்பு பாலப்பணி தாமதத்தால் 3 கிராம மக்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக புலவன்பட்டி ஊர் மக்கள் அளித்த மனு:
புலவன்பட்டி கிராம வாய்க்காலில் புலவன்பட்டி, வெயில் முத்தன்பட்டி, அம்பலவாணபுரம் ஆகிய கிராமங்களுக்கான பிரதான பாதையில் இணைப்புப் பாலம் சீரமைப்பு பணி கடந்த8 மாதத்துக்குமுன் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.16 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளியும் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்பணிகள் தற்போது நடைபெறவில்லை. பொதுமக்கள் இப்பகுதியைக் கடந்து செல்ல பாலத்தின் அருகில் ஒரு தொங்கு பாலம்போல் அமைத்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் இவ்வழியாகச் சென்ற 3 பேர் வாய்க்காலில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். பிஎல்டபிள்யூஏ உயர்நிலைப்பள்ளி, அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இதுதான் பிரதான பாதை.பள்ளிகள் திறந்துவிட்டால் இந்தப்பாலம் வழியாகத்தான் மாணவர்கள் செல்ல வேண்டும். எனவே, பாலப்பணியை விரைவுபடுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட கிராமிய கரகாட்டக் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தினர் அளித்த மனு:
பாரம்பரியமாக கிராமிய கரகாட்டத் தொழிலை 4-வது தலைமுறையாக நடத்தி வருகிறோம். கோயில் திருவிழாக்களை நம்பியேஇத்தொழில் இருக்கிறது. கரகாட்டத் தொழிலைத் தவிர வேறுதொழில் எதுவும் எங்களுக்கு தெரியாது.
கரோனாவால் கடந்த 1 ஆண்டாக தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மிகவும்வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இவ்வாண்டு கிராமியக் கலைநிகழ்ச்சிகளை தடையின்றி நடத்த அந்தந்த காவல்துறை மூலம்அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
திருநெல்வேலி தாலுகா புதூர்கிராமம் யாதவர் வடக்குத் தெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி எஸ்.கணேசன், வருவாய்த்துறை மூலம் மாதாந்திர உதவித் தொகை மற்றும் 3 சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago