அரக்கோணம்- சேலம் ரயிலை கரூர் வரை இயக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

அரக்கோணம் – சேலம் சிறப்பு ரயிலை நாமக்கல் வழியாக கரூர் வரை இயக்க வேண்டும், என நாமக்கல் ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு அரக்கோணம் - சேலம் இடையே குறுகிய தூர விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரக்கோணத்தில் இருந்து கடந்த 6-ம் தேதி முதல் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06087) அதே நாளில் காலை 10.50 மணிக்கு சேலம் செல்லும்.

மறுமார்க்கமாக சேலத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06088) அதேநாளில் இரவு 9.10 மணிக்கு அரக்கோணம் செல்லும். இந்த சிறப்பு ரயில்கள் காட்பாடி, ஜோலார்பட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலை நாமக்கல் வழியாக கரூர் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரக்கோணத்தில் 5.15 மணிக்கு புறப்படும் ரயில் கரூருக்கு 12 மணிக்கு வந்தடையுமாறும், கரூரில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு, சேலத்தில் இருந்து 3.30-க்கு வழக்கம் போல இயக்கலாம். மேலும், ராசிபுரம், நாமக்கல், மோகனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். இவ்வாறு இயக்கினால் கரூர், நாமக்கல் மாவட்ட மக்களின் பல ஆண்டு கனவான சென்னை செல்ல பகல் நேர ரயில் வசதி கிடைக்கும்.

இதே போல் ராமேஸ்வரம் திருச்சி வரை இயக்கப்படும் விரைவு ரயிலை கரூர், நாமக்கல் வழியாக சேலம் வரை இன்டெர்சிட்டி ரயிலாக இயக்கினால் சேலம், நாமக்கல் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளுக்கு நேரடியாக செல்லலாம். இது நாமக்கல் பகுதி பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்