பொங்கல் போனஸ் தொடர்பாக விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரிடையே குமாரபாளையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் பொங்கல் போனஸ் 20 சதவீதம் வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக விசைத்தறிக்கூட உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன், செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் ராஜேந்திரன், தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் சிஐடியு மாவட்ட செயலாளர் அசோகன், மோகன், பாலுசாமி, வெங்கடேசன், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை ஏற்கப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பாக சிஐடியு மாவட்ட செயலாளர் அசோகன் கூறுகையில், பள்ளிபாளையத்தில் 9.50 சதவீதம் போனஸ் கேட்டு பெற்றுள்ளோம். குமாரபாளையத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் தொழிற்சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் தங்கமணியிடம் தகவல் தெரிவிக்கப்படும். அதிகாரிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி நாளை (11-ம் தேதி) வட்டாட்சியர் அலுவலகம் முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago