தமிழ் மொழியில் தான் ஓலைச்சுவடிகள் அதிகம் தொல்லியல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் தகவல்

By செய்திப்பிரிவு

இந்திய மொழிகளிலேயே அதிகமான ஓலைச்சுவடிகள் கொண்டது தமிழ் மொழியில்தான், என இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளர் தி.சத்தியமூர்த்தி பேசினார்.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் சென்னை டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் சார்பில் சுவடியியல் பதிப்பும், தொகுப்பும் என்ற தலைப்பில் இணையவழிப் பயிலரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் பெ.முருகன் தலைமை வகித்துப் பேசியதாவது:

உ.வே.சா பிறந்து வரும் பிப்ரவரி மாதத்துடன் 166 ஆண்டுகள் ஆகின்றன. இன்றளவும் அவர் புகழைப் பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னும் பல நூறு ஆண்டுகள் அவர் பெயரினை உச்சரித்துககொண்டே இருப்போம். அவருடைய பணியும், அர்ப்பணிப்பும் அத்தகையது, என்றார்.

இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளரும், சென்னை டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையத்தின் செயலாளருமான முனைவர் தி.சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:

ஓலைச்சுவடிகளை இளைஞர்கள் பயில வேண்டும். தமிழரின் பாரம்பரியத்தை மீட்டுக் கொண்டு வந்ததில் ஓலைச்சுவடிகளின் பங்கு மகத்தானது. ஓலைச்சுவடிகனை மாணவர்கள் படிப்பதற்குப் பயிற்சி பெற வேண்டும். இந்திய மொழிகளிலேயே அதிகமான ஓலைச்சுவடிகள் கொண்டது தமிழ் மொழியில்தான். இதை பாதுகாக்கவும், பராமரிக்கவும் அற்பணிப்பு தியாக உணர்வு உடையவர்கள் தேவைப்படுகின்றனர். உ.வே.சா நூல்நிலையத்தில் 10,000-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளன. அவற்றையெல்லாம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து வருகிறோம். விரைவில் நீங்கள் எளிமையாக இணையதளத்தில் பார்க்கலாம், என்றார்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் பேசுகையில், 150 ஆண்டுகள் வரை மக்களிடம் ஓலைச்சுவடிகள் பல தலைமுறைகளாக இருந்துள்ளன. சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள் பல இருந்துள்ளன. பின்னர் அழிக்கப்பட்டுள்ளன. தமிழன் தான் கண்டதை கேட்டதை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல ஓலைச்சுவடிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தான். ஓலைகள் ஆண் பனை, பெண் பணை என இரு வகைப்படும்.

இதில் பெண் பனை ஓலைகளில் மட்டுமே எழுதுவதற்குப் பயன்படுத்தினர். அழியாமல் இருக்கும் தன்மை கொண்டது. ஆண் பனை ஓலை மெல்லியது எளிதில் அழியக்கூடியது. ஓலையின் பதம் அறிய உ என்று எழுதி சோதனை செய்தனர். அதுவே பிற்காலத்தில் பிள்ளையார் சுழி என்றாகிவிட்டது, என்றார்.

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் பி.கந்தசாமி, தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் மு.நடராஜன், தமிழ் உதவிப்பேராசிரியர்கள் முனைவர் கா.சந்திரசேகரன், து.ரவிக்குமார், பி.இன்னமுது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்