சென்னிமலை முருகன் கோயிலில் கட்டுப்பாடுகளுடன் தைப்பூச திருவிழா காவடி ஊர்வலம், அலகு குத்து நடத்த தடை

By செய்திப்பிரிவு

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் சைபுதீன் தலைமை வகித்தார். ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, பெருந்துறை வட்டாட்சியர் முத்துக்கிருஷ்ணன், சென்னிமலை கோயில் செயல் அலுவலர் அருள்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தைப்பூசத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னிமலை முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி 14 நாட்கள் அந்தந்த கட்டளைதாரர்கள் மூலம் பூஜைகள் நடைபெறும்.

ஆனால், இந்த ஆண்டு மண்டபக்கட்டளை நிகழ்ச்சி கள் அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பில் மட்டுமே நடைபெறும். இதில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

அதேசமயம் சுவாமியின் திருவீதி உலா காட்சி எதுவும் நடைபெறாது. கோயிலுக்கு காவடி எடுத்து வருதல், அலகு குத்தி வருதல் போன்ற எந்த ஒரு நிகழ்வுக்கும் அனுமதி இல்லை. தைப்பூச நாளான வரும் 28-ம் தேதி மற்றும் மகா தரிசன நாளான பிப்ரவரி 1-ம் தேதி ஆகிய இரு நாட்களும் வழக்கம்போல் சென்னிமலை கைலாசநாதர் கோயிலில், கோயில் நிர்வாகம் சார்பில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

ஏற்கெனவே அறிவித்த அரசு உத்தரவின்படி தேங்காய், பழம், பூ, மாலை போன்ற பூஜை பொருட்கள் எதுவும் கோயிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் அன்னதானம் வழங்குவதற்கும் அனுமதி இல்லை. மேலும், வரும் 28, 29-ம் தேதிகளில் மலைப்பாதை வழியாக தனியார் கார், வேன் போன்ற வாகனங்கள் சென்னிமலை கோயிலுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர் திருவிழாவை முன்னிட்டு சென்னிமலை பேரூராட்சி பகுதியில் கடைகள், ராட்டினங்கள் போன்ற பொழுதுபோக்கு பொருட்காட்சிகள் அமைப்பதற்கு அனுமதி இல்லை.

பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய வரவேண்டும். பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தால் அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஈ பாஸ் முறை கொண்டுவரப்படும், என முடிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்